சென்னை:சென்னையில் கேப் டிரைவராக பணியாற்றிய ஜெயராஜும், வணிக வளாகம் ஒன்றில் காவலாளியாக இருந்த அவரது மனைவி இலக்கியாவும் வேளச்சேரி நேரு நகரில் வசித்து வந்தனர். பணியிலிருந்து தாமதமாக வரும் நாட்களிலும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட நாட்களிலும் கணவரிடம் பணம் கொடுக்கும் இலக்கியா, பிரியாணி வாங்கி வரச் சொல்லி, இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று அடிக்கடி பணம் கொடுத்து பிரியாணி வாங்கி வரச் சொல்வதால், பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது, மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதால், தற்போது நல்ல சாப்பாடு சாப்பிடுவதாக இலக்கியா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயராஜ் திட்டியதால், ஆத்திரமடைந்த இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.
பின்பு சமாதானம் அடைந்து இருவரும் உறங்கிய நிலையில், நள்ளிரவில் விழித்த ஜெயராஜ், இலக்கியாவை கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி பிறரை நம்ப வைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, இலக்கியாவின் வளர்ப்புத் தாய் மணிமொழி அளித்த புகாரில், கிண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி முகமது பாருக் முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்த்தி ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஜெயராஜ் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் 10 ஆயிரம் ரூபாயை இலக்கியாவின் வளர்ப்புத் தாயிடம் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!