தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுக்கடங்காத கவுன்சிலர்கள்.. சவால்களை சமாளிப்பாரா நெல்லையின் சைக்கிள் மேயர்? - Tirunelveli Mayor Ramakrishnan - TIRUNELVELI MAYOR RAMAKRISHNAN

Tirunelveli Mayor Ramakrishnan: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நெல்லை மாநகராட்சியின் 7வது மேயராக பதவியேற்றுள்ள 'சைக்கிள் மேயர்' என்றழைக்கப்படும் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் கடந்து வந்த பாதை குறித்தும், திமுக தலைமைக்கு கட்டுப்படாத கவுன்சிலர்கள் மத்தியில் தமக்கு முன்னுள்ள சவால்களை மேயர் எப்படி சமாளிக்க போகிறார்? என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.

நெல்லை மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 6:04 PM IST

Updated : Aug 12, 2024, 12:46 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றான நெல்லை பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி உள்ளிட்ட தலைவர்களை நமக்கு தந்துள்ளது. இருட்டுக்கடை அல்வாவுக்கு பெயர்போன திருநெல்வேலி நகரம் கடந்த 1994ஆம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

மேயர் என்பது ஒட்டுமொத்த உள்ளூர் மக்களின் குரலாகவும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் பாலமாகவும் செயல்பட வேண்டிய பதவியாகும். ஆனால், சமீபகாலமாகவே கவுன்சிலர்கள் - மேயர் இடையேயான மோதல் போக்கு தொடர்வதை பார்க்க முடிகிறது. எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்திற்கு மேல், மேயர் மக்கள் பிரச்சனையை மறந்து, கட்சி பிரச்சனையை சரி செய்யவே நேரத்தை செலவிட வேண்டிய அளவுக்கு நிலைமை போய்விடுகிறது. இதனால் மக்கள் பணி முடங்கும் சூழல் ஏற்படுகிறது.

உட்கட்சி பூசல்: கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. மீதமுள்ள வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தனி மெஜாரிட்டி பெற்றதால், திமுக தலைமையால் மேயர் வேட்பாளராக சரவணன் முன்னிறுத்தப்பட்டார். எவ்வித அரசியல் இடையூறும் இல்லாமல் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு, நெல்லை மாநகராட்சியின் 6-வது மேயராக, திமுகவின் 16வது வார்டு கவுன்சிலர் சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால், ஒரு சில நாட்களிலேயே உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்தது. நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வகாப்புக்கும், சரவணனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதாகக் கூறப்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அப்துல் வகாப் சரவணனை எப்படியாவது மேயர் பதவியிலிருந்து காலி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது கட்டுப்பாட்டில் உள்ள திமுக கவுன்சிலர்கள் மூலம் தொடர்ச்சியாக குடைச்சல் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

திமுக தலைமைக்கே கட்டுப்படாத கவுன்சிலர்கள்: அதன்படி, அனைத்து மன்ற கூட்டங்களிலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். குறிப்பாக சரவணன் ஊழல் செய்வதாக வெளிப்படையாக குற்றாம் சாட்டிய கவுன்சிலர்கள், மேயரை மாற்ற கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். தொடர்ந்து, மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. ஆனால், கட்சி தலைமை எச்சரித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவுன்சிலர்கள் தோல்வியடையச் செய்தனர்.

அதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் கவுன்சிலர்களை சமாதானம் செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தது. மேலும், சரவணனை தொடர்பு கொண்டு கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர காலக்கெடு கொடுத்தது. ஆனால் எதுவும் பயனளிக்காதபட்சத்தில், சரவணனை மாற்ற முடிவு செய்த திமுக தலைமை அவர் கையாலேயே ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. அதன்படி, சரவணனும் அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திமுக தலைமை அதிரடி:இதற்கிடையில், மீண்டும் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் நபரால் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக இருந்தது. அதற்காக திருநெல்வேலி மாநகர பகுதியில் மெஜாரிட்டியாக உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களையே மேயர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என முடிவு செய்தது. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை இந்த முடிவுக்கு வந்தது. எனவே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களில் ஒருவருக்கு தான் நிச்சயம் மேயர் பதவி கிடைக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

அதற்காக பலரும் கவுன்சிலராக காய் நகர்த்தி வந்த நிலையில், முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 25வது வார்டை சேர்ந்த கிட்டு (எ) ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. திமுகவில் 5 முறை வட்ட செயலாளராக பதவி வகித்த இவருக்கு பெரிதளவில் பண பலம், சொத்து என எதுவும் கிடையாது. ஏன் சொந்தமாக ஒரு பைக் கூட இல்லாமல், தினமும் சைக்கிளில் அனைத்து இடங்களுக்கு செல்லும் அடிமட்டத் தொண்டனாக இருந்தவர். இவருக்கு உயர் பதவி கிடைத்திருப்பதை அறிந்து சக திமுக தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

பரபரப்புகளுக்கு மத்தியில் பதவியேற்பு:குடிசையில் உள்ள தொண்டனை கோபுரத்தில் ஏற்றி அழகு பார்ப்பவர் என போற்றப்படுபவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தற்போது ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண தொண்டனான ராமகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்ததால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என கட்சி தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அதை தவிடுபொடியாக்கும் வகையில் எதிர்ப்பு கிளம்பியது.

கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக 6-வது வார்டை சேர்ந்த கவுன்சிலர் பவுல்ராஜ் களமிறங்கினார். அதனால், தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த 5ஆம் தேதி நடந்த தேர்தலில், 55 கவுன்சிலர்களில் 54 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதில், திமுக தலைமைக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றிருந்தார். திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இருப்பினும், பவுல்ராஜ் 45 சதவீத வாக்குகள் பெற்றிருப்பது, பழைய மேயர் சரவணனுக்கு இருந்ததைப்போல ராமகிருஷ்ணனுக்கும் கட்சியில் கடும் எதிர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால், இவர் இன்னும் இரண்டரை ஆண்டுகள் எப்படி பிரச்சனை இல்லாமல் கட்சியை வழிநடத்தப் போகிறார் என திமுக தலைமையில் பெரும் கேள்வியாக உள்ளது. இவ்வளவு பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆக.10) புதிய மேயராக ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியின் 7-வது மேயராக பதவியேற்றுக் கொண்டார்.

காத்திருக்கும் சவால்கள்:நெல்லையில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை திட்டத்தின் 3ம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இதற்கிடையே 3ம் கட்டப்பணி என்பது பெயரளவுக்கு மட்டுமே துவங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணிகளின் தொய்வுக்கு கவுன்சிலர் - மேயர் இடையே ஏற்பட்ட மோதல் போக்குதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல, முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் மேலப்பாளையம் என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பகுதியில் குடிநீர் வழங்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது. தற்போது இதுபோன்ற தார்மீக பொறுப்பு புதிய மேயருக்கு உள்ளது. அதேசமயம், திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் கவுன்சிலர்களின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை. தற்போது, முன்னாள் மேயர் சரவணனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததைப் போல, ராமகிருஷ்ணனுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்ற கூட்டங்களில் திமுக கவுன்சிலர்கள் குழப்பமிட்டால், மேயரால் மக்கள் பணியில் கவனம் செலுத்த முடியாது. ஆகையால் கண்முன் இருக்கும் மிகப்பெரிய சவாலை புதிய மேயர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மாநகர மக்களின் கேள்வியாக உள்ளது.

பிரச்சினை இல்லாமல் கூட்டத்தை நடத்துவது, கவுன்சிலர்களை சமாளிப்பது, அதிகாரிகளை ஒருங்கிணைப்பது என பல்வேறு சவால்கள் உள்ளது. ஆனால் அன்றாடம் தனது பணிகளை முடித்து விட்டால், எந்த சவாலும் இருக்காது என கூலாக தெரிவிக்கிறார் புதிய மேயர். இதுதொடர்பாக "சைக்கிள் மேயர்" என்றழைக்கப்படும் ராமகிருஷ்ணனை ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் சார்பில் சந்தித்தபோது அவர் பேசியதாவது, "ஒரு சாதாரண தொண்டனை மேயராக்கி தமிழக முதலமைச்சர் அழகு பார்த்துள்ளார். திமுகவில் அடிப்படை தொண்டனும் உயர்ந்த இடத்திற்கு வரும் வாய்ப்பை கொடுத்துள்ளார். மாமன்ற உறுப்பினராக இருந்தபோது தினமும் காலை 6 மணி முதலே எனது பணிகளைத் தொடங்கி விடுவேன்.

மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகளை நல்ல முறையில் செய்ய வேண்டும். எனது சைக்கிள் மூலமாக தான் சென்று மக்களை சந்தித்துள்ளேன், பல பணிகளை நிறைவேற்றியுள்ளேன். 55 வார்டுகளிலும் சுகாதாரப் பணிகளுக்கு குடிநீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து தருவேன். தாமிரபரணி இருப்பதால் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

சவால்களை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?:பிரச்சனைகள் என எதுவும் இல்லை. சவால் என்ற வார்த்தையும் எனக்கு இல்லை. முதலில் சவால் என்ற வார்த்தையே எனக்கு கிடையாது. ஏனென்றால், அன்றாட உள்ள பணிகளை அன்றே முடித்துவிட்டால் அது சவாலாக இருக்காது. நான் உட்பட அனைத்து மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என்றார்.

நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஒரே சொத்து சைக்கிள் தான்: சொந்தமாக கார், பைக் என எதுவும் கிடையாது. என்னுடைய ஒரே சொத்து இந்த சைக்கிள் மட்டும்தான். கிட்டத்தட்ட 30 வருடமாகப் பயன்படுத்தி வருகிறேன். அரசாங்க பணிகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் காரை பயன்படுத்துவேன். பிற இடங்களுக்கு செல்லும் போது வழக்கம்போல் எனது சைக்கிளை தான் பயன்படுத்துவேன். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் என்னை 'சைக்கிள் மேயர்' என்றழைக்கும் அளவிற்குப் பெயர் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

தற்போது நெல்லையில் புதிய மேயராக பதவியேற்றுள்ள ராமகிருஷ்ணன், ஒரு மேயராக தனக்கு சவால்கள் இல்லை என எதார்த்தத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் கூட, கட்சியில் உள்ள கவுன்சிலர்களை சமாளிக்கும் மாபெரும் பொறுப்பை எப்படி கையாளப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அதானியுடன் செபி தலைவருக்கு தொடர்பா? ஹிண்டன்பெர்க் அறிக்கையால் புது சர்ச்சை! என்ன நடந்தது?

Last Updated : Aug 12, 2024, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details