வேலூர்: அணைக்கட்டு வட்டம், ஊசூரை அடுத்த கோவிந்த ரெட்டி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 443 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதியைக் கண்டித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் நேற்று(ஜன.29) காலை பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், "இப்பள்ளி தலைமையாசிரியை ரேவதியின் தொல்லை தாங்காமல் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு இடமாறுதலாகியும், மாற்றுப்பணிக்கும் சென்றுவிட்டனர். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்களின் கல்வி பாழாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வேலூரில் இயங்கி வரும் தனியார் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் ஆசிரியர் பயிற்சிக்காகக் கடந்த 80 நாட்களாக இப்பள்ளியில் பணியாற்றி வந்தனர். கடந்த 18ஆம் தேதியுடன் 80 நாட்கள் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு வருகை பதிவேட்டினை சரிவர வழங்காததால் கடந்த 18ஆம் தேதிக்கு பிறகும் அந்த மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருகின்றனர்.
மேலும், அந்த மாணவிகள் பயிற்சி முடிந்த சான்றிதழைக் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், தலைமையாசிரியை முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்துவிட்டதால் அவர்கள் பள்ளியில் மீண்டும் பயிற்சி ஆசிரியராக பணியாற்றுகின்றனர். தலைமையாசிரியையின் இத்தகைய செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து குடியரசு தின விழாவைப் புறக்கணித்தோம்.
மேலும், கிராமசபைக் கூட்டத்தில் தலைமையாசிரியைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பள்ளிக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பள்ளியின் தலைமையாசிரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக மாணவர்கள் நீண்ட நேரம் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"மகனாக நான் இருக்கிறேன்" - பூரணம் அம்மாளிடம் நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!