தருமபுரி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 11) தருமபுரி அரசு கலைக் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவில் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அமைத்த வள்ளல் அதியமான் கோட்டம் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவாவிற்கு கலைஞர் மணிமண்டபம் எழுப்பினார். தியாகியின் விருப்பமாகப் பாரதமாதா நினைவாலயம் திமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு அவசரச் சிகிச்சை, சிசு தீவிர பராமரிப்பு மையத்தைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.
இந்த நிலையில், தருமபுரியில் இன்று (மார்ச் 12) அதிமுக சார்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன், முதலமைச்சர் பேச்சுக்குப் பதில் அளித்தார்.
அப்போது பேசிய கே.பி.அன்பழகன், "அதியமான் கோட்டம் கட்டப்பட்டு இருக்கும் இடம், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம். அந்த இடத்திற்கு 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு மாற்றி, அதியமான் கோட்டம் கட்ட காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. கட்டி முடிக்கப்பட்ட பிறகு திறந்து வைத்தது மட்டும்தான் திமுக.