தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு; நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 324 பேர்! - Air France flight

AIRFRANCE flight: சென்னையிலிருந்து இன்று அதிகாலை பாரீஸ் புறப்படவிருந்த ஏர் ஃபிரான்ஸ் பயணிகள் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, இயக்குவதற்கு முன்பாகவே விமானி கண்டுபிடித்து நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 324 பேர் உயிர் தப்பினர்.

சென்னை, பாரீஸ் ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு
சென்னை, பாரீஸ் ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:38 PM IST

சென்னை: ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தினமும் பாரீஸில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து பாரீஸ் புறப்பட்டுச் செல்லும். அதேபோல், அந்த விமானம் நேற்று நள்ளிரவு குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டது.

இந்த விமானத்தில் சென்னையில் இருந்து பாரீஸ் செல்வதற்கு 308 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு முன்னதாகவே, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். இந்நிலையில், சென்னையில் இருந்து பாரீஸ் செல்ல வேண்டிய ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், விமான ஊழியர்கள் 16 பேர் உள்பட 324 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்த பின்பு, விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன.

இதையடுத்து, விமானி விமானத்தை ஓடுபாதையில் இயக்கத் தொடங்கியபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்துள்ளார். இந்நிலையில், விமானத்தை வானில் பறக்கச் செய்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக விமானத்தை ஓடுபாதைகளிலேயே அவசரமாக நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விமானத்தின் இழுவை வண்டி மூலம், ஏர் ஃபிரான்ஸ் விமானம், விமானங்கள் நிற்கும் பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, விமானப் பொறியாளர் குழு, விமானத்திற்குள் ஏறி விமானத்தைப் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் விமானம் பழுது பார்க்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தின் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால், இன்று காலை 7 மணி வரையில் விமானம் பழுது பார்க்கும் பணி முடிவடையாததால், பாரீஸ் செல்ல வேண்டிய ஏர் ஃபிரான்ஸ் விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, விமான நிலையத்தின் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகள் அனைவரும், சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை நகரில் பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் பழுது பார்க்கப்பட்டு நாளை (மார்ச் 1) அதிகாலை சென்னையில் இருந்து பாரீஸ் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானம் ஓடுபாதையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே விமானி கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால், விமானத்திற்கு ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 324 பேர் உயிர் தப்பினர்.

இதையும் படிங்க:காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details