டெல்லி:கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை, கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மேலும், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜாபர் சாதிக்கை டெல்லி அழைத்து வந்த அதிகாரிகள், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் திமுகவை, பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 10) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.