கொச்சி: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அத்திக்களம் காட்டுப் பகுதிக்கு நேற்று மாடுகளை தேடி சென்ற மாயா ஜெயன், பாருக்குட்டி, டார்லி ஆகிய மூன்று பெண்கள் மாயமான நிலையில் இன்று மீட்கப்பட்டனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் அத்திக்களம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு நேற்று மாலை மாயா ஜெயன், பாருக்குட்டி, டார்லி ஆகிய மூன்று பெண்கள் தங்களது மாடுகளை தேடி நுழைந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், பெண்கள் காணாமல் போன காட்டு பகுதியில் காவல்துறை, தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர், கலால் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய பெரிய அளவிலான குழு தேடுதல் வேட்டையில் இறங்கியது. நான்கு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டை தொடங்கியது. இரண்டு குழுக்கள் தேடுதல் பணியில் இருந்து திரும்பிவிட்டன. இரண்டு அணிகள் மட்டும் தேடுதல் வேட்டையை தொடர்ந்தன. வனப்பகுதிக்குள் ஆளில்லா விமான சோதனையும் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: '108' ஆம்புலன்சில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சகோதரி உடந்தை.. நள்ளிரவில் பயங்கரம்!
போலீசாரின் தகவலின்படி, நேற்று மாலை 3 மணியில் இருந்து அவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் ஒரு பெண் செல்போன் வைத்துள்ளார். ஆரம்பத்தில் அவரை தொடர்புகொள்ள முடிந்தது. அதற்கு பிறகு செல்போன் ரீச் ஆகவில்லை. மாயமான பெண்கள் அடர்ந்த காட்டுக்குள் உள்ள பள்ளத்தாக்கு பாறையில் தஞ்சடம் அடைந்திருக்கலாம் என எண்ணுகிறோம். அவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்'' என தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று காணாமல் போன மூன்று பெண்கள் இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். மூவரும் காட்டுக்குள் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கமுத்தி என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், புதன்கிழமை அன்று அவர்களது மாடுகள் காட்டில் காணாமல் போனதாகவும், அவைகளை தேடி நேற்று அந்த மூன்று பெண்களும் காட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது, காட்டு யானைகளைக் கண்டு பயந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக மீட்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்