தருமபுரி: பென்னாகரம் அருகே அலகட்டு மலை கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை, மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபாதையாக தூக்கிச் சென்ற நிலையில் சிறுமி வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது அலகட்டு மலைகிராமம். இந்த மலைகிராமம் கடல்மட்டத்தில் இருந்து 1,132 அடி உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 29 வீடுகளில், 42 குடும்பத்தில் 153 நபா்கள் வசித்து வருகின்றனர். அலகட்டு மலைகிராமத்தில் இருந்து சாலைக்கு வருவதற்கு மூன்றரை கிலோமீட்டர் செங்குத்து வழியாகவும், நான்கு கிலோமீட்டர் காட்டுபகுதி மலைபாதையாகவும் உள்ளது.
இந்நிலையில், கடந்த சிலமாதங்களுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், இப்பகுதியில் உள்ள பாதைகளில், சில இடங்களில் சீர் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதை சேதமடைந்து வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இப்பகுதிக்கு முறையான சாலை வசதி கேட்டு மலை கிராம மக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலகட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா- சிவலிங்கி தம்பதியினரின் மகள் கஸ்தூரி (13). இவர் நேற்று( நவ.28) வியாழக்கிழமை, அவரக்ளது தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றபோது பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள், அவரை அலகட்டு மலை கிராமத்தில் இருந்து, சீங்காடு கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம், தொட்டில் கட்டி தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு துக்கிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சந்தேகத்தில் காரை துரத்திய போலீஸ்; அவசரத்தில் காரை தலைகுப்புற கவிழ்த்த கடத்தல்காரர்கள்!
சிறுமி உயிரிழப்பு: தொடர்ந்து, சீங்காடு கிராமத்தில் இருந்து பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு 20 கிலோமீட்டா் தொலைவில் அமைந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இந்த சமயத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முறையான சாலை வசதியில்லாத காரணத்தால் மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுமி உயிரிழந்த விவகாரம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் கோரிக்கை: மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல், பாம்பு கடி, பூச்சிக்கடி, பிரசவம் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கு எட்டு கிலோ மீட்டர் தூரம் தூளி கட்டி துக்கிகொண்டு வரும் பரிதாப நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து மலை கிராமப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/8hcGQubZ9H
— TN DIPR (@TNDIPRNEWS) November 28, 2024
முதலமைச்சர் இரங்கல்: இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் 13 வயது சிறுமி கஸ்தூரி கீரை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்