சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (நவ.30) சனிக்கிழமை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புயல் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவ.28) இரவு முதல் நாளை (நவ.29) மற்றும் நாளை மறுநாள் (நவ.30) காற்றின் வேகம் அதிகமாக வீசப்படும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் விமான சேவைகளை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பலத்த காற்று வீசுகின்ற நேரத்தில், ஏ டி ஆர் எனப்படும், சிறிய ரக விமானங்கள் வானில் பறப்பது பாதுகாப்பானது இல்லை என ஏ டி ஆர் ரக விமானங்களை இயக்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாம்பன் புதிய ரயில் பாலம் குறித்த சர்ச்சை: தெற்கு ரயில்வே விளக்கம்!
அதிலும் குறிப்பாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, சேலம், திருச்சி, மதுரை மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏ டி ஆர் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்கள் நாளை (நவ.29) வெள்ளிக்கிழமையும், நாளை மறுநாள் (நவ.30) சனிக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் அந்த விமானங்கள் இயக்குவதை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாளை (நவ.29) மற்றும் நாளை மறுநாள் (நவ.30) ஆகிய இரு தினங்களில் சென்னையில் இருந்து விமானங்கள் புறப்படுவது அதைப்போல் சென்னைக்கு விமானங்கள் வந்து சேர்வது போன்ற பயணிகளை அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் பயணிக்க இருக்கும் விமானங்கள் நிலை என்ன? குறித்த நேரத்தில் இயக்கப்படுகிறதா? தாமதமாக இயக்கப்படுகிறதா? இல்லையேல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறதா? என்ற விவரங்களை கேட்டுக் கொண்டு அதற்கு தகுந்தார் போல் தங்களுடைய பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்