சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கும் திமுக ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டங்களையும், அதன் இடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளிடம் முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையையும் நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமான தொகுதிகளில் தாக்கல் செய்வதற்கான படிவங்களும் விநியோகம் செய்யப்பட உள்ளன. இப்படி நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வரும் திமுக, ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும் இன்று முதல் (பிப்.16) தொடங்கி இருக்கிறது.
அதன்படி, இன்று தொடங்கிய தேர்தல் பிரச்சார கூட்டங்கள் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகள் தவிர்த்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், இன்றைய தினம் திருப்பெரும்புதூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டம் நடைபெற்றது.