திருநெல்வேலி: வேட்பாளர் அறிவிப்பு, தொகுதிப் பங்கீடு, பிரச்சார தேதி அறிவிப்பு என விறுவிறுப்பாக நாடாளுமன்றத் தேர்தல் களம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்த நிலையில், திமுகவில் முதல் கட்டமாக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பெயர்களை சமீபத்தில் கட்சித் தலைமை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 20) திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சில தொகுதிகளில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த திமுக நிர்வாகிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பல முன்னணி திமுக நிர்வாகிகள் தயாராக இருந்தனர். குறிப்பாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக செயல்பட்டு வரும் கிரகாம்பெல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில், இதுவரை நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக அதிகபட்சம் ஏழு முறையும், காங்கிரஸ் கட்சி ஐந்து முறையும் மற்றும் திமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருவதாக அறியப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, இராதாபுரம், வள்ளியூர் மற்றும் திசையன்விளை போன்ற பகுதிகளி காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதியை ஒதுக்குவதால், வெற்றி வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கப்படாது என்பது திமுக தலைமையின் கணிப்பாக உள்ளது என்று கூறப்படுகிறது.