தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல்: மாநில எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்! - BIRD FLU

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2025, 8:16 PM IST

வேலூர்:ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் ஆந்திரா - தமிழ்நாடு இணைக்கும் வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, ராஜமுந்திரி, மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளது. இவை அனைத்தும் பறவை காய்ச்சல் காரணமாக இறந்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பண்ணை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோழிகள் விற்பனை தடை செய்யப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பறவைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி (ETV Bharat Tamil Nadu)

வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு:

அந்த வகையில், வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான்பேட்டை, சைனாகுண்டா, பரதராமி, பகுதிகளில் அமைந்துள்ள மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வழியாக கோழிகள், முட்டைகள் ஏற்றி வரும் வாகனங்களை, வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நிறுத்தி கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், கோழிகளை கால்நடை மருத்துவர்கள் சோதனையிட்டு தமிழகத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.

இது குறித்து வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வேலூர் மாவட்டத்தில் 48 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. அங்கு பணியாற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள கோழிகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதா? என்பதை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பண்ணைகளில் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை தொடரும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details