சென்னை: சுச்சி லீக்ஸ் (Suchi Leaks) என்ற பெயரில், பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பல்வேறு புகைப்படங்கள், விமர்சனங்கள் 2017ஆம் ஆண்டில் வெளியானது அனைவரும் அறிந்ததே. இவற்றுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை எனவும், தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் சுசித்ரா மறுத்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது, சுசித்ராவின் பேட்டியாலும் அதில் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும் மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது. சுசித்ரா தனது கணவர் கார்த்திக் குமார் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள் பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். தனிநபர்களின் அந்தரங்கங்கங்களை எல்லை மீறி ஆராயும் இந்த பேட்டி ஊடக அறம் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது மட்டுமின்றி இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்தும் பொது தளத்தில் விவாதிக்கப்பட்டு, பிரிந்த இணையர் சேர்ந்து அறிக்கை விடுத்து கண்டிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டது.
பிரபலங்களாக இருப்பவர்களின் அந்தரங்க விவகாரங்கள் பொதுவெளியிலும், ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் நிலையில், இணைய குற்றத் தடுப்பு நிபுணர் மற்றும் உண்மை சரிபார்ப்பு நிபுணர் முரளிகிருஷ்ணன் சின்னதுரையுடன் விவாதித்தோம். அவர் கூறியதாவது, "தனிநபர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை பார்த்து தான் ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட வேண்டும். நேரலையில் ஒருவர் மீது தனிப்பட்ட ரீதியாக குற்றம் சுமத்தினாலும், அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்பதை ஊடக நெறியாளர் கேட்க வேண்டும்.
சில இடங்களில் ஊடக நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அந்தந்த நேரத்தின் பரப்பரப்புகாக செய்தியை வெளியிடுவதை நோக்கமாக வைத்துள்ளனர். ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் அதற்கான விளக்கங்களை பெற வேண்டும்.
இசையமைப்பாளரும், பாடகியும் மணமுறிவு செய்கிறார்கள் என்றால், மணமுறிவு என்பது மட்டும் தான் செய்தி. பிரபலங்கள் மணமுறிவு என்பதற்கான முடிவை இருவரும் சேர்ந்து எடுத்துவிட்டால், அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமைக்கானவை. அவை நல்லதா? கெட்டதா? எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. அதே போன்று சேர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட பேட்டியையும் தற்போது வெளியிடுவது தவறு தான்" என குறிப்பிடுகிறார்.