சென்னை: சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மாநிலக் குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின் கட்டணம் - சிறு, குறு உற்பத்தியாளர்களின் போராட்ட கோரிக்கை, தீபாவளி பண்டிகைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், தமிழக ரேஷன் கடைகளில் தீபாவளியை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், “அக்டோபர் 31ஆம் தேதி அனைத்துப் பகுதி மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக, உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறிவிடும் சூழல் இருக்கிறது. சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலையும், நிரந்தர வருமானமும் சமூகத்தில் சிறு பகுதியினருக்குத் தான் இருக்கிறது. மிகப் பெரும்பாலானவர்கள் முறைசாராத் தொழிலாளர்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளுமே ஆவர்.
இத்தகைய பகுதியினர் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ் நாட்டில் சுமார் 7 கோடி பேர்களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளே ஆதாரமாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.