கோயம்புத்தூர்:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணிநியமன ஆணைகள் வழக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், "முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் 238 வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு பல்வேறு தொழில் முதலீடுகள், நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் பேருக்கு மேலாக தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை மொத்தமாக உருவாக்கி இருக்கிறோம். அரசு துறைகளில் நிரப்பபடாமல் இருக்கும் 75 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முதல்வர் திட்டமிட்டு இருக்கிறார். முதன் முதலில் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் உதயநிதி தொகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.
அப்பொழுது எனக்கு வேலை வாய்ப்பு முகாம் என்றால் என்ன என்று கூட தெரியாது. அவருடன் சென்று தான் வேலை வாய்ப்பு முகாம்கள் குறித்து தெரிந்து கொண்டேன். தொழிலாளர் நலத்துறை ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டு முயற்சியுடன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.