கோவை:கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் துணி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இருபுறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.
சாக்கடை குழியை மூடிய மாநகராட்சி பணியாளர்கள் (Video Credits - ETV Bharat Tamil Nadu) இந்த சூழலில் அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதுகுறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும், பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி, அவ்வழியே நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென அதற்குள் விழுந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பெண்மணி பாதாள சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளையும் சிலாப்புகள் கொண்டு மூடினர்.
இந்நிலையில் இன்று இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன், பாதாள சாக்கடை பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்தக்காரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், உதவி செயற்பொறியாளரிடம் இதுகுறித்து கடிதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்தார். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை பணிகள் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், பணிகளை சரியாக செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:தமிழகத்தில் இன்று முதல் 800 ஆம்னிப் பேருந்துகளுக்கு தடை.. வேறு மாநில பதிவெண் பேருந்துகளில் புக்கிங் செய்ய வேண்டாம்! - Tamil Nadu OMNI BUS ISSUE