சென்னை:தமிழகத்தின் புதிய துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், அமைச்சரவையில் மாற்றமும் இன்று அதிகாரப்பூர்வ முறையில் நடந்த நிலையில், இவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், கட்சியின் புதிய அமைச்சரவையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், கட்சியின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்குடன் நமது அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. சமூகநீதி சிந்தனையோடு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்புநிலை மக்கள், ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இம்மூன்றாண்டு கால வளர்ச்சிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் பங்களித்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு கட்டமாகவே தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சரான எனக்கு துணையாக அல்ல; இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல, உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டுத் துறை, மிகக் குறுகிய காலத்தில் வீறுகொண்டு எழுந்துள்ளது.
நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்றுவரும் பரிசுகள், ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்து, அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார் அமைச்சர் உதயநிதி.
கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டோராக கூர் தீட்டியும் வருகிறார். அவரது செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதலமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்திட வேண்டும்.