சென்னை:தென்சென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு அரசால் குத்தகைக்கு வழங்கப்பட்ட 160.86 ஏக்கர் நிலம் மீளப்பெறப்பட்டு, அந்நிலத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருந்து மீண்டும் பெறப்பட்ட நிலத்தில் ஏற்கனவே உள்ள 3 குளங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மற்றும் புதிதாக 4.24 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த குளங்கள் வெட்டப்படுவதன் மூலம் பிள்ளையார் கோயில் தெரு, மடுவாங்கரை, ஐந்து பர்லாங் சாலை, வண்டிகாரன் தெரு, ரேஸ் கிளப் உட்புறச் சாலை, வேளச்சேரி பிரதான சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிண்டி ரேஸ் கிளப் மழைநீர் செல்லாமல் இக்குளங்களிலேயே தேக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதே போல் வேளச்சேரி இரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கல் ஓடை, நாராயணபுரம் ஏரி ஆகிய பகுதிகளில் தூர் வரும் பணி மற்றும் நீர் ஓழுங்கியினை சீரமைப்பு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட முதலமைச்சர் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க:"சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பதுதான் வெள்ளை அறிக்கை" - இ.பி.எஸ்-க்கு பதிலளித்த உதயநிதி!
- கேள்வி - நேற்று பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்றைக்கு எல்லா இடங்களிலும் மழைநீர் வடிந்துள்ளது.
முதலமைச்சர் பதில் – "அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லையா? நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களே அதுவே எங்களுக்கு சந்தோஷம். இதை இன்னும் சில பேர் டிவிஸ்ட் செய்து சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நீங்கள் விளக்கம் கொடுங்கள்" - கேள்வி – மழைநீர் பணிகள் அரசுக்கு கை கொடுத்திருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
முதலமைச்சர் பதில் - "நிச்சயமாக, உறுதியாக நம்புகிறேன். நீங்களே மக்களிடம் சென்று கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள். நாங்கள் சொல்வதைவிட அவர்களிடம் சென்று கேட்டால் தான் சரியாகத் தெரியும். உண்மை புலப்படும்". - கேள்வு – தற்போது 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்திருக்கும் சூழ்நிலையில் மேலும் மழை வரும்… என்பது குறித்து,
முதலமைச்சர் பதில் – "நாங்கள் ஏற்கனேவே 3 மாதங்களாக இதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் நாங்கள் குழு அமைத்து, நான் ஆட்சியில் வந்தவுடனே அதற்கான பணிகளில் இறங்கினோம்.
இப்போது, அப்பணிகளை படிப்படியாக செய்து கொண்டு வருகிறோம். இன்னும் 20 முதல் 30 சதவிகிதம் பணிகள் மீதம் உள்ளது. அதையும் வரக்கூடிய காலக்கட்டத்தில் முடித்துவிடுவோம். அதனால், சென்னை மக்களுக்கும், சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதி மக்களுக்கும் நிரந்தரமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இப்பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும், யார் யார் இப்பணியில் ஈடுபட்டு இதில் வெற்றி கண்டிருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.