சென்னை:சென்னையில் இருந்து 159 பயணிகளுடன் அதிகாலை சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர், கோளாறு சரிசெய்யப்பட்டு, 7 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று (ஜனவரி10) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு, 159 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 167 பேருடன் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது. ஆனால், திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, விமானம் வானில் பறந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை சென்னையில் மீண்டும் திருப்பிக் தரையிறக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.