சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை நிலவரம் : வட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளதால், சோழவரம் 30 செ.மீ, செங்குன்றம் 28 செ.மீ, ஆவடி 25 செ.மீ, கத்திவாக்கத்தில் 23 செ.மீ, மணலியில் 21 செ.மீ மழை என 5 இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கடந்த அக் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் 138 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 71 மி.மீ அதிகம்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு நிலை கொண்டுள்ளது? :தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கே தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திரப் பிரதேசம் நெல்லுருக்கு தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு வட மேற்கு தொலைவில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில், புதுவைக்கும் - நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதனால் அடுத்த நான்கு தினங்களுக்கு வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.