சென்னை:அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், 2005ஆம் ஆண்டு ஆனந்தீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆனந்தீஸ்வரி தனது பெயரை ஜெனீபர் என மாற்றி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஜோசப் வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதனை மனைவி ஜெனீபர் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜோசப், ஜெனீபரை வயிறு, நெஞ்சு மற்றும் கை கால்களில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, காயமடைந்த ஜெனீபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து அரும்பாக்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளீர் நீதிமன்ற நீதிபதி ஶ்ரீதேவி, மனைவியை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் நடந்திருப்பது அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜோசப்புக்கு 2 பிரிவுகளின் கீழ் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.