தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல் வழக்கு: விசாரணை நடைபெற்றது எப்படி? சிபிசிஐடி போலீசார் விளக்கம்! - VENGAIVAYAL ISSUE

வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் விசாரணை எப்படி நடைபெற்றது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

வேங்கைவயல் நீர் தொட்டி
வேங்கைவயல் நீர் தொட்டி (ETV Bharat Tamil)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 10:42 AM IST

Updated : Jan 25, 2025, 12:46 PM IST

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டை பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. மேலும், இந்த வழக்கின் தீவிரத் தன்மையை அறிந்து தீவிரப்பு புலன் விசாரணை நடத்த கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் பெற்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பல மாதங்களாக தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் சாட்டபட்டவர்களை கண்டறிந்து இறுதி அறிக்கையை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக இந்த அறிக்கையில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் தான் குற்றவாளி என்பதை விசாரணையில் கண்டுபிடித்ததாக இறுதி அறிக்கையில் சிபிசிஐ போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விசாரணை எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில், "சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பிறகு அதில் புகார் தாரர்கள், சந்தேக நபர்கள், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், சாட்சியங்கள் என சுமார் 397 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

அதேபோல் 196 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி அதில் அழிக்கப்பட்ட விவரங்கள், அதில் இருந்த விவரங்கள் என அனைத்தையும் எடுத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களின் உள்ளடக்கிய 87 டவர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதிலுள்ள உரையாடல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சந்தேகம் படும்படியாக இருந்த நபர்களின் உரையாடல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

வேங்கை வயல், எறையூர் கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் கூறிய வாக்குமூலங்களை பட்டியலிட்டதாகவும், அதே போல் கிராம மக்களிடம் இருந்து உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மலம் கலந்த மாசுபட்ட நீரை அருந்திய குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என மருத்துவரீதியான அறிக்கையில் உறுதி செய்யப்பட்டதாகவும், வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, இரு தரப்புக்கு ஏற்பட்ட முன்னுவிரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரம்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கமா?" - சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!

அதாவது, குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேங்கை வயல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவி பத்மா என்பவரின் கணவர் முத்தையா வேங்கை வயலைச் சேர்ந்த காவலர் முரளி ராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியுள்ளார்.

அதனால் ஊராட்சி மன்ற தலைவி கணவரை பழி வாங்கும் நோக்கில் காவலர் முத்து ராஜாவின் மூலம் இந்த சம்பவம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல உரையாடல்கள் புகைப்படங்கள் மீட்கப்பட்டு விசாரணை நடத்தியதில் இவர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கை, புலனாய்வு அதிகாரிகளால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுனர்களின் கருத்துக்கள் மற்றும் சாட்சியங்களின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து இந்த இறுதி அறிக்கையை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 25, 2025, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details