தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 5:12 PM IST

ETV Bharat / state

"திராவிட கட்சி கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியும்" - தமிழிசை செளந்தரராஜன் - Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan: கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்:முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன், இன்று தனது பிறந்தநாளை ஒட்டி, குடியாத்தம் அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்தனைச் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர், அத்தி இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்பொழுது தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன், ‘வெற்றி திருமகள் வாழ்க வெற்றி திருமகள் வாழ்க’ என தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், "தன்னுடைய பிறந்தநாள் செய்தியாக என்னுடைய வாழ்க்கை முழுவதும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துள்ளேன். மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்.

அதற்காக தான், நான் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்றவுடன் மக்களுக்காக பாடுபடுவேன். அதிக அளவில் படித்தவர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் எல்லோரும் பொது வாழ்க்கைக்கு வந்தால் தான் அரசியல் தூய்மைப்படுத்தப்படும்.

பொது வாழ்க்கை என்பது மக்களுக்காக இல்லாமல், தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் என மாறி வருகிறது. தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம். எக்ஸிட் போலை விட இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் நிறைய திட்டங்கள் கொண்டு வரலாம். அதற்கான ஆரம்ப கட்டம் தான் இது.

இந்த தேர்தல் திராவிட கட்சிகள் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளோம். பிரதமர் எத்தனையோ மாநிலத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர் தமிழகத்திற்கு, குறிப்பாக குமரிக்கு வந்து பிரார்த்தனை செய்வது நமக்கு பெரிய பாக்கியமாக கருத வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வேங்கை வயல் பிரச்னை எவ்வளவு நாட்கள் ஆகி உள்ளது. இதுவரை ஒரு தீர்வு கூட ஏற்படவில்லை. கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சென்னையிலேயே மூன்று நான்கு கொலைகள் அண்மையில் நடந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அதிக அளவில் வெற்றி பெறுவோம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஒரு போதும் அப்படி நடக்காது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் எதிரொலி; விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அரியலூர் - கடலூர் மேம்பாலப் பணிகள்!

ABOUT THE AUTHOR

...view details