ஐதராபாத்: கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களும் ஏதாவது ஒரு சாதனையை படைக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டுமே தங்கள் சாதனைகளால் கடைசி வரை அனைவரது நினைவிலும் இருக்கின்றனர். மேலும், சிலர் வித்தியாசமான சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றிலும், மக்களிடத்திலும் தங்களுக்கான இடத்தை பெறுகின்றனர்.
அப்படி தாங்கள் விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்ற வீரர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பரத் ரெட்டி: முன்னாள் கிரிக்கெட் வீரரான பரத் ரெட்டி இந்திய அணிக்காக 80 காலக்கட்டங்களில் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியுடனான இவரது பயணம் 1978 - 1981 வரையே ஆகும். இந்த காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக அவர் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இதில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே அவர் பேட்டிங் செய்துள்ளார். இரண்டு போட்டிகளிலும் அவர் அவுட்டாகாமல் கடைசி வரை களத்தில் நின்று இந்த சாதனையை படைத்துள்ளார்.
சவுரப் திவாரி: அவருக்கு அடுத்தபடியாக இடது கை பேட்ஸ்மேனான சவுரப் திவாரி. நீண்ட முடியுடன் ஒரு சாயலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நினைவுபடுத்துவார். சவுரப் திவாரி இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இதுவரை மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள சவுரப் திவாரி மொத்தம் 49 ரன்கள் குவித்துள்ளார். சவுரப் திவாரியும் தான் ஆடிய போட்டிகளில் ஒன்றில் கூட அவுட்டாகமல் கடைசி வரை களத்தில் நின்று இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பைஸ் பைசல்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பைஸ் பைசல். இந்திய அணியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பைசல் களமிறங்கினார். இந்திய அணிக்காக ஒரேயொரு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடிய பைசல் அதில் அவுட்டாகாமல் 55 ரன்கள் குவித்தார். அதன் பின் அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
இதையும் படிங்க: உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது! - Bangladesh Womens team victory