சென்னை: அபிராமபுரத்தில் வசித்து வரும் 72 வயது மதிக்கதக்க ஓய்வு பெற்ற பொறியாளருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில், உங்கள் செல்போன் இணைப்பு இரண்டு மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என்றும், மேலும் தகவலுக்கு எண் 09 அழுத்துமாறு பதிவு செய்யப்பட்ட குரலில் அழைப்பு வந்துள்ளது. தன்னுடைய செல்போன் எண், ஆதார், வங்கி கணக்கு, கேஸ் சிலிண்டர் இணைப்பு, இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளதால் பதட்டமடைந்த அவர் செல்போன் துண்டிக்கப்படகூடாது என்ற காரணத்தினால் எண் 09 அழுத்தியுள்ளார்.
முதியவருக்கு குறி வைத்த கும்பல்: உடனே அந்த போன் அழைப்பில் பேசிய மோசடி நபர் உங்கள் போன் நம்பர் மற்றும் ஆதார் எண் பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, ஹவாலா பணபரிவர்த்தனை நடந்துள்ளதால், உங்கள் மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி உங்கள் கால் மும்பை போலீசுக்கு இணைக்கின்றோம் என்று கூறியுள்ளார்.
கைது செய்வோம்: மும்பை போலீஸ் என கூறிகொண்டு பேசிய மோசடி நபர்கள், உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி உங்கள் பெயரில் பல வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, பெடெக்ஸ் கொரியர் மூலம் சட்டவிரோதமான போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட், 257 ஏடிஎம் கார்டு, புலி தோல் ஆகியவை அடங்கிய பார்சல் ஒன்று சுங்கதுறையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தமாக விசாரணைக்கு இரண்டு மணி நேரத்தில் மும்பை சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என கூறி இல்லையெனில் உங்களை கைது செய்வோம் என மிரட்டியுள்ளனர்.
பதறிய முதியவர்: உடனே அச்சம் அடைந்த முதியவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க அவர்களிடம் கேட்டபோது, வழக்கு விசாரணைக்கு வீடியோ கால் மூலம் ஒத்துழைத்தால் உங்களை விடுதலை செய்கிறோம் என்று நம்பவைத்து வீட்டிலே தனிமைபடுத்தி இருக்க சொல்லி, பின்னர் உங்கள் கணக்குகளில் சட்ட விரோதமான பணிபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என ஆராய வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்பு தொகை அனைத்தையும் RBI வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும், 30 நிமிடங்களில் வங்கி கணக்கு சரிபார்த்து உங்கள் பணம் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று நம்பவைத்து ரூ.4.67 கோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.
பெருகும் சைபர் அர்ரெஸ்ட்: இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் கிடைத்த உடன் தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். நடைப்பெற்ற விசாரணையில், வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சேர்ந்த மோசடிகாரர்கள், ஏமாற்றிய பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு பணத்தை அனுப்புவதும், அதற்கு நிகரான கிரிப்டோகளை பெற்றுக்கொண்டு திறம்பட மாட்டிக் கொள்ளாமல் இதுநாள் வரை செயல்பட்டது தெரிய வந்தது.
மேலும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 53 லட்சம் பணம் மற்றும் இக்குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், செக்புக் ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இவ்வழக்கு தொடர்பாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.