திருப்பத்தூர்: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அக்டோபர் 3ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோயம்புத்தூர் , ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில், காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், பிற்பகலில் குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. பரவலாக தொடங்கிய மழை திடீரென பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கனமழையாக மேலாக கொட்டித்தீர்த்து.
இந்த கனமழையினால் ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணிகள் காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வெளியேற முடியாமல், தேசிய நெடுஞ்சாலையிலேயே தேங்கி நின்றது.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் மழைநீர் வெள்ளத்தில் பாதியளவு மூழ்கியபடியே ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை: நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய நெடுஞ்சாலை துறை!
குறிப்பாக சாலையோர கடைகளில் மழைநீர் புகுந்ததால், கடையின் உரிமையாளர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து அங்குள்ள வியாபாரிகள் கூறுகையில்," ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெடுச்சாலையை ஒட்டிய கடைகளில் மழைநீர் புகுந்துவிட்டது.
மேலும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மழைநீரில் மூழ்கியபடி பயணிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பருவமழை தீவிரமடைவதற்குள் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரி செய்ய வேண்டும், மேல்பால பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை” என நெடுஞ்சாலைத்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.