சென்னை: தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, கழிவைக் கொட்டிய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
சமீபத்தில், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் பிற கேரள மருத்துவமனைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டத்தின் கோடகநல்லூர் மற்றும் நடுக்கல்லூர் பகுதிகளில் கொட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது.
பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை:
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்நிலையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வில் கேரள விவகாரம் தொடர்புடைய ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ்நாடு அரசு மருத்துவக் கழிவு பிரச்னையை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது.
தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுண உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், கேரளாவின் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை கடுமையாக கண்டித்தனர். மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற தேவையான வசதிகளை ஏற்படுத்தாத மருத்துவமனைகளுக்கு ஏன் அனுமதி வழங்க வேண்டும் என கேரள அரசை கேள்வி எழுப்பினர்.
கேரளா கழிவை அகற்ற உத்தரவு:
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற கேரள அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கில், கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது திருநெல்வேலி மாவட்டத்தில் இக்கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு ஒப்படைக்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), மருத்துவக் கழிவுகளின் மூலமாக கருதப்படும் ரிஜினல் கேன்சர் சென்டர் (Regional Cancer Centre), கிரெடன்ஸ் மருத்துவமனை (Credence Hospital) மற்றும் திருவனந்தபுரம் கோவளத்தில் உள்ள லீலா ஹோட்டல்ஸ் (Leela Hotels) ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (PCB) எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
தொடர் கதையாகும் கேரள கழிவுகள்:
தென் தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ச்சியான பிரச்னையாக இருந்துவருகிறது. கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களின் மக்கள், குறிப்பாக கேரளாவிலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்படுவது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க |
இந்த சம்பவங்கள் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொது சுகாதாரம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டை கேரளாவின் குப்பைக் கிடங்காக மாற அனுமதித்ததற்காக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி கட்சியின் நலன்களை முன்னிறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், போராட்டம் நடத்தி கழிவுகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவதாக அண்ணாமலை எச்சரித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.