சென்னை: சென்னை ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் 4-வது தெருவில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தனலட்சுமி (44). இவர் தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தனலட்சுமி கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜன.31) அதிகாலை நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கி இருந்து அறையில் இருந்து புகை அதிகளவில் வெளியேறியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பல்லாவரம் போலீசார் தனலட்சுமி தங்கி இருந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
![பெண் மருத்துவரின் ஐடி கார்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/31-01-2025/tn-che-02-firedeath-photo-script-7208368_31012025144123_3101f_1738314683_997.jpg)
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிரடி தண்டனை! விளக்குகிறார் வழக்கறிஞர்!
இதையடுத்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது வீட்டில் இருந்த ஏசி கம்ப்ரசர் வெடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், அறையில் இருந்து தனலட்சுமி செல்போனை போலீசார் மீட்டு விசாரணை நடத்திய போது, அதில் தனலட்சுமி தனது உறவினர்களிடம் வாழ விருப்பம் இல்லை என தெரிவித்து வந்த உரையாடலை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்து வந்த தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏசி கம்ப்ரசர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு உயிர் இழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக மரணம் என வழக்கு
மேலும், இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். எரிந்த நிலையில் தனலட்சுமி சடலமாக கிடந்தார். மேலும், தடய அறிவியல் துறை அதிகாரிகளை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தனலட்சுமி ஏசி வெடித்த விபத்தில் உயிர் இழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என தடய அறிவியல் துறை அதிகாரிகளின் விசாரணையில் தான் தெரிய வரும். தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் 174 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்'' என தெரிவித்தனர்.