சென்னை: சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒரே நேரத்தில் 555 பேருக்கு 555 வர்ம சிகிச்சையாளர்கள் மூலம் சிகிச்சை அளித்து உலக சாதனை படைத்துள்ளது.
தாம்பரம் சித்த மருத்துவமனை நிறுவன வளாகத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய ஆயூஷ் துறை செயலாளர் ஸ்ரீ வைத்யா ராஜேஷ் கோடச்சே கலந்து கொண்டார். இந்த சாதனையை பாராட்டும் விதமாக கின்னஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்வதும் மற்றும் சித்த மருத்துவத்தின் சிகிச்சைகளை நம்பிக்கை உரியதாக மாற்றுவதுதான் என தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாம்பரம் தேசிய சித்த நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது," கின்னஸ் சாதனை முயற்சி என்பது ஒரு மைல்கல்லை விட மேம்பட்டது. சித்த மருத்துவத்தின் செயல் திறன், மருத்துவ முறைகள் பற்றி உலகுக்கு வெளிப்படுத்தும் செய்தி இது. வர்மம் போன்ற இந்திய பாரம்பரிய சிகிச்சை முறையை நோக்கி, உலகின் கவனம் அதிக அளவில் திரும்பி வருகிறது.
இந்த நிகழ்வு வெறும் உலக சாதனை அல்ல. இந்தியாவின் பண்டைய மருத்துவ பாரம்பரியத்தின் கொண்டாட்டம் ஆகும். பண்டைய சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி தான் வர்ம சிகிச்சை. இது வலி மேலாண்மை, பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
குறிப்பாக மூளை, நரம்பு மண்டலம், எலும்புகள், மூட்டுகள், தசைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. பக்கவாதம், முடக்குவாதம், விபத்து தொடர்பான காயங்களுக்கு இந்த சிகிச்சை பயன் அளிக்கிறது. உடலின் முக்கிய ஆற்றல் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம், குணமாக்குவதை வர்ம சிகிச்சை ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: தமிழ் பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது! முதல்வர் வாழ்த்து!
உயிர் சக்தியை அதிகரிக்கிறது. உடல் சமநிலையை மீட்டெடுக்கிறது, இந்த மருத்துவ முறையானது சித்த மருத்துவத்திற்கு உரியதானது. இது தமிழில் உள்ள பழமையான நூல்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடு போன்ற பழைய குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இந்த மருத்துவ முறை அதிக அளவில் பிரபலமாக அறியப்படுகிறது. இப்போது இதை அறிவியல்பூர்வமாக எடுத்து வந்துள்ளோம்" என்று மீனாகுமாரி தெரிவித்தார்.