நாகோன்: ஒருங்கிணைந்த இளைஞர் அதிகாரம்-பொது முயற்சி குழு அமைப்பின் பிரதிநிதியாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 57 ஆவது கூட்டத்தில் அசாமை சேர்ந்த இளைஞர் ஹிரக்ஜோதி போரா பங்கேற்று பேசினார். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் இருந்து தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், அசாமின் நாகோன் மாவட்டத்தில் திங் டவுன்ஷிப் பகுதியில் பெண் ஒருவருக்கு போதை பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து அவர் ஐநா மனித உரிமை கவுன்சிலில் சுட்டிக்காட்டினார்.
திங் பகுதியில் ஆகஸ்ட் மாதம் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். தங்களின் பாதுகாப்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதன் காரணமாக அசாம் பெண்கள், சிறுமிகள் வேதனையோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை!
மாநில அரசைப் போலவே மத்திய அரசும் பெண்களை பாதுகாப்பதில் அலட்சியமாக இருக்கிறது என்றும் கூறிய அவர், பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை கவுன்சில் அமைப்பை அவர் கேட்டுக் கொண்டார்.
நாகோனில் உள்ள திங் டவுன்ஷிப்பைப் பூர்வீகமாகக் கொண்ட ஹிரக்ஜோதி போரா, குவஹாத்தியில் உள்ள காட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். ஹிராக்ஜோதி தனது பட்டப்படிப்புக்குப் பிறகு சமூக மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டு, 'டச் ஆஃப் ஹ்யூமானிட்டி' என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.