தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காதது ஏன்?- எச்.ராஜா சொல்லும் விளக்கம்!

திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே கூட்டணி கட்சிகளை வைத்துக் கொள்கின்றன. ஆட்சியில் பங்கு தருவதில்லை என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

அமைச்சர் ரகுபதி, எச்.ராஜா
அமைச்சர் ரகுபதி, எச்.ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

புதுக்கோட்டை:திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டுமே கூட்டணி கட்சிகளை வைத்துக் கொள்கின்றன. ஆட்சியில் பங்கு தருவதில்லை என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாநகர நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா, "செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை இதுவரை கைது செய்ய முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாகப் பேசிய தமோ.அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் அமைச்சரவையில் வைத்துள்ள இவர்கள், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு தக்க பாதுகாப்பு வேண்டும் நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் கை உடைக்கப்பட்டது.

வீட்டுக்கு போக வேண்டிய அரசு: திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் தந்தது கிடையாது. 1967ல் இருந்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த திமுக இதுவரையில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. திமுக இதுவரை கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சி அமைத்ததும் கிடையாது. திருமாவளவனுடன் கூட்டணி வைப்பார்கள், ஆட்சி அமைப்பாளர்கள் ஆனால் மந்திரி சபையில் பங்கு என்றவுடன் அவரை வெளியே அமர வைத்து விடுவார்கள்.

எச்.ராஜா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு சட்ட ஞானம் தான் இல்லை என நினைத்தேன், ஆனால் அரசியல் ஞானமும் இல்லை என்று இப்போது தான் தெரியவந்துள்ளது. பாஜக குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கட்சி கிடையாது. பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. பல மாநிலங்களில் கூட்டணியுடன் ஆட்சியில் இருக்கிறது. ரகுபதி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். அவர் அம்மா, அம்மா என்று இருந்தார். இப்போது ஐயா, சின்னையா என்று போய்விட்டார். நிலையான அரசியல் அவருக்கு கிடையாது.

இதையும் படிங்க:"விரக்தி, ஏமாற்றம்.. விஷ ஜந்துகளுக்கு நாங்கள் விஷக்காளான்கள் தான்" - எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்குப் பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் மருத்துவர் கத்தி வைத்துக் கொள்ளலாம், நோயாளி கத்தி எடுத்துச் செல்லலாம். அது தற்போதைய திமுக ஆட்சியில் நடந்து வருகிறது.
மருத்துவத்துறைக்கு அமைச்சராக இருக்கும் ஸ்போர்ட்ஸ் மேன் மினிஸ்டர் சத்தமே இல்லாமல் உள்ளார். இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றுப் போய், வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அரசாங்கம்.

திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை: மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவலர்களுக்கு வெளியே பாதுகாப்பில்லை. இந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பில்லை. கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. அதை என்னால் தடுக்க முடியாது. வரும் தேர்தலில் திமுக 200 சீட்டுகள் பிடிக்கும் என்று கனவு காணட்டும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிடமாகும். இதுபோன்ற நிகழ்வு கடந்த காலங்களில் நடந்துள்ளது. திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும், திமுக என்பது முட்டாள் கூட்டம். குஜராத் கூட பஞ்ச திராவிடத்தில் ஒரு பகுதி. திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை" எனத் தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்காக காத்திருக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆயிரத்து 500 போலி ஆசிரியர்கள், உயர் கல்வித்துறையில் 794 பொறியியல் கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த அரசாங்கத்தில் ஒரு துறை கூட திறமையாக செயல்படவில்லை. ஏனென்றால் அனைத்து அமைச்சர்களுக்கும் சின்ன எஜமானுக்கு கும்பிடு போட்டு, அவருக்கு நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது.

பாஜகவுக்கு போட்டியாக தமிழ்நாடு அரசியலில் யாரும் கிடையாது. ஏனென்றால் திமுக எதை செய்ததோ அதைத்தான் கிளிப் பிள்ளையாக விஜய் செய்து கொண்டிருக்கிறார். பாஜகவிற்கு சீமான் B டீம், விஜய் C டீம் என்று நாங்கள் கூறவில்லை. அதனால் இந்த கேள்வியை எங்களிடம் கேட்கத் தேவை இல்லை. பாஜக மனு போட்டு யாருடைய கூட்டணிக்காகவும் காத்திருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டத்தான் முடியும், ஆனால் செயல்படுத்த வேண்டியது ஆளும் அரசாங்கம் தான்.

அரசியல் சட்டம் ராகுலுக்கு தெரியுமா?:அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்த எச்.ராஜா, ராகுல் காந்தி அடிப்படையிலேயே படிக்கவில்லை. அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் போட்டு, மாநிலங்களை முடக்கி, 1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது.

அப்போது கோலிக் குண்டு ஆடிக் கொண்டிருந்தவர் தான் ராகுல் காந்தி. இந்திரா காந்தி அரசியல் சட்டத்தை நாசப்படுத்தினார். அப்போது எங்கு சென்றிருந்தீர்கள். அதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் சட்டம் ராகுலுக்கு தெரியுமா? நாடாளுமன்ற விவாதத்தின் போது, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்று கேட்டபோது, அவருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர் படிக்கவில்லை. எனவே ராகுல் காந்தி கொஞ்சம் அடக்கமாகப் பேச வேண்டும். இந்த கேள்விக்கு வரும் 23ஆம் தேதி மக்கள் பதிலளிப்பார்கள," என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details