நீலகிரி:நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அவ்வாறு வரும் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், குன்னூர் வசந்தம் நகர் பகுதியில் பகல் நேரத்தில் ஒரு கரடி உலா வருவதை நேரில் கண்ட குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
காட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய இந்த கரடி, இன்று பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அந்த தேயிலைத் தோட்டத்தில் அமர்ந்து இரண்டு மணி நேரமாக கரடி ஓய்வுயெடுத்ததை பார்த்த தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பின்னர், உடனடியாக அங்கிருந்து வெளியேறிய தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், இது குறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கரடி இருக்கும் பகுதிக்கு வந்த வனத்துறையினர், கரடியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.