சென்னை: வேளச்சேரி ஏரி பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு பகுதி எனக்கூறி, 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்தாதவாறு பாதுகாக்க அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்தது அப்பகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி ஏரியை ஒட்டியுள்ள ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர், சசி நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகள் உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் நிலம் கையகப்படுத்துவதாக செய்தித்தாளில் வந்த தகவல்கள் வெளியானது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், அந்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (நவ.25) காலையிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், ஆகையால் வேளச்சேரி ஏரி பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளை அகற்றக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்துப் பேசினார்.
அப்பொழுது, "உங்களின் நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை என்பது தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியுள்ளது. அதற்கு அரசு சார்பில் பதிலளிக்க, இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கையைக் கணக்கிடும் வகையில், அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்.. மினி வேடந்தாங்கலாக உருவெடுக்கும் கிளியூர் ஏரி!
மேலும், சட்டப்படி உங்களின் குடியிருப்புகள் கையகப்படுத்தும் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெறுவதற்கு அரசு சார்பில் உறுதுணையாக இருப்போம் என அமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார். அதனடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இப்பகுதியில் உள்ள குடியிருப்பு என்பது நீர்நிலையில் உள்ளது என்பதால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையின் பரிணாம வளர்ச்சி காரணமாக, நீர் நிலையின் பரப்பளவு குறைந்துவிட்டது. இந்த குடியிருப்பு உள்ள பகுதிகள் நீர்நிலை பரப்பளவில் இல்லை.
தற்போது, இந்த பகுதியில் 955 குடியிருப்புகள் உள்ளது. அதனைப் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது நீர்நிலை பகுதியில் இல்லை என்பதை பசுமை தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிரூபிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை, அதை அரசு வழக்கறிஞர் மேற்கொள்வார்கள். அரசு நீர்நிலை உருவாக்குவதில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் 4 குளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் வேளச்சேரி 6 வழி கால்வாய் பகுதி பெரும் ஆக்கிரமிப்பு இருந்தது. அதை அகற்றி தற்போது குளம் வெட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அரசுக்கு கொடுத்த ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனை முறைக்கேடாக விற்பனை?.. கொந்தளிக்கும் குடியிருப்புவாசிகள்!
இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பு என்பது இப்பகுதியின் மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை இவற்றை கணக்கெடுத்து நீதிமன்றத்தில் வாதாட எடுக்கப்பட்டது தவிர வேறு எதற்காகவும் இல்லை. இங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் இருக்கிறார். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
இப்பகுதி மக்களை பெரும்பாக்கத்திற்கு மாற்றுவதாகச் செய்தித்தாள் வந்துள்ள என்பது அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்குவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முடியாத ஒன்று. நீர் நிலை ஆதாரங்களில் இருந்து குடியிருப்பு ஆதாரங்களாக மாறி உள்ளவற்றிற்கு பட்டா வழங்க முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு," எனத் தெரிவித்தார். ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்தது அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்