சென்னை: தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான எபினேசர் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தையல் இயந்திரம், மூன்று சக்கர பேட்டரி வாகனம், 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது; கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு துணை முதல்வரை சந்தித்து பிறந்தநாள் கூட்டத்திற்கு செல்கிறேன் என்று கூறினேன். ஆனால், அவர் கூறியது பிறந்த நாள் கூட்டத்தை விரைந்து முடித்து வர சொன்னார். எதற்கு என்று கேட்டதற்கு, மழை புயல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்படாதவாறு பணி செய்ய வேண்டும் என்று கூறினார். அதுபோல் மக்கள் பணியில் அதிக ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 15 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். மகளிர்களுக்கு உதவி தொகை, பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், காலை சிற்றுண்டி திட்டம், எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம், வேலையில் அமரலாம் என்பதற்கு ஆலோசனை வழங்கி வேலைவாய்ப்பு என இப்படி மக்கள் திட்டங்கள் இந்த ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
தமிழக முதல்வரின் செயல்பாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக தாய்மார்கள் உள்ளனர். சமூக நீதி, சமத்துவம் என்று மக்களுக்காக உதயநிதி ஸ்டாலின் பயணித்து வருகிறார். விளிம்பில் உள்ள மக்களுக்காக பாடுபடக்கூடியவராக துணை முதல்வர் விளங்குகிறார். இன்று 'டெபியூட்டி' சிஎம் ஆக இருக்கும் உதயநிதி, நாளை 'டெஃபனட்' ஆக சிஎம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோயல், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மருது கணேஷ், பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், பகுதி நிர்வாகிகள் அனிபா, ஆர்.டி ராஜா, பாலு, வட்ட செயலாளர்கள் குமார் நாகராஜன் தமிழ்ச்செல்வன் மற்றும் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்