கோயம்புத்தூர்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக டெல்லியில் இருந்து விமானம் வாயிலாக கோவை வந்தார். கடும்பனி காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் உதகைக்குச் சென்றார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமான மூலம் காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை தமிழ்நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பூங்கொத்துக் கொடுத்தும், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி புத்தகம் கொடுத்தும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தியும் வரவேற்றனர்.
முதலில், கோவை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக பயணதிட்டம் மாற்றப்பட்டு, சாலை மார்க்கமாக குடியரசுத் தலைவர் உதகை கிளம்பினார்.
![குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்கும் கிராந்தி குமார் பாடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-11-2024/tn-cbe-01-president-arrival-visu-7208104_27112024105940_2711f_1732685380_262.jpg)
கோவையில் இருந்து அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலை பாதை வழியாக அவர் உதகை சென்றார். குடியரசு தலைவர் சாலை மார்கமாக செல்வதால், இந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனர். மூன்று நாட்கள் உதகையில் உள்ள ராஜபவன் இல்லத்தில் தங்கும் அவர், வியாழக்கிழமை (நவம்பர் 28) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க |
பின்னர் வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களை ராஜ்பவனில் சந்தித்து உரையாடுகிறார். தொடர்ந்து, உதகையில் இருந்து கோவை வரும் குடியரசு தலைவர், விமானம் மூலம் திருச்சி சென்று 30-ஆம் தேதி திருவாரூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
இதனையடுத்து, அங்கிருந்து திருச்சி வரும் அவர் அன்றைய தினமே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் தங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் உதகையில் இருந்து குன்னூர் வெலிங்டன் செல்லும் சாலை மற்றும் ராஜ்பவன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, மோப்ப நாய்கள் கொண்டு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் சோதனைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ராஜ்பவனை சுற்றியும், நக்சல் தடுப்பு தடுப்பு பிரிவு எனப்படும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி உதகை நகரில் ஆங்காங்கே சிறு சிறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-09-2024/22546140_etv-bharat-tamil-nadu-whatsapp-channel-link.jpg)
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்