சென்னை: மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது மேடையில் துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதாவது;
ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சராக நான் கலந்துகொள்ளவில்லை. திமுக தொண்டனாகவே கலந்து கொண்டுள்ளேன். ஒட்டு மொத்த தமிழ்நாடும் கொந்தளிப்பில் இருக்கிறது. அன்புக்குதான் கட்டுப்படுவோமே தவிர, அடக்குமறைக்கு அல்ல. அதை காண்பிக்க தான் இந்த போராட்டம் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மக்களின் வரிப்பணம்
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இல்லை. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நாம் கேட்ட நிதியை தரவில்லை. இந்தியை ஏற்காததால் மத்திய அரசு நிதி தரவில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். நாங்கள் ஒண்ணும் உங்க அப்பன் வீட்டு பணத்தை கேட்கவில்லை.. உங்களிடம் பிச்சை கேட்க்கவில்லை.. எங்களுடைய உரிமையை தான் கேட்கிறோம்.
![உதயநிதி ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-02-2025/tn-che-udhayanidhi_18022025194327_1802f_1739888007_947.jpg)
தமிழ்நாடு மக்கள் செலுத்திய வரிப்பணத்தை தான் கேட்கிறோம். இரு மொழி கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலுக்காக மும்மொழி கொள்கையை ஏற்க மறுப்பதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். எங்களுக்கு மொழி பற்று அதிகம்; மிரட்டலுக்கு அடிப்பணிய மாட்டோம், அது கனவில் கூட நடக்காது.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது
ராஜஸ்தான், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களின் மொழிகள் அழிந்து வர காரணம் இந்தி தான். நாமும் இந்தியை ஏற்றுவிட்டால் தாய் மொழியை மறந்து விடுவோம். இதற்கு முன்னர் இருந்த அடிமை அரசு அல்ல; இது திராவிட மாடல் அரசு. மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம். நிதியை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் எப்படி எடுப்பது என தெரியும். மொழி திணிப்பு நடந்தால் தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது.
![திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-02-2025/tn-che-udhayanidhi_18022025194327_1802f_1739888007_698.jpg)
தமிழை காக்க உயிரை கொடுப்போம்
அதிமுக இதில் அரசியல் அவதூறு பரப்பாமல் எங்களுடன் இணைந்து குரல் கொடுத்து வீதிக்கு வர வேண்டும். கட்சி பெயரில் அண்ணாவையும், திராவிடத்தையும் வைத்து கொண்டு வேடிக்கை பார்க்காதீர்கள். அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நின்று போராட வேண்டும். 1938,1965-ல் இந்தி திணிக்க முயன்றது போல் இப்போதும் நினைக்கிறார்கள். தமிழை காக்க உயிரை கொடுக்க தயாராக உள்ளோம். மத்திய அரசு அரசியல் கலக்காமல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்ட களமாக மாறும். இந்த முறை 'கோ பேக் மோடி' இல்லை 'கெட் அவுட் மோடி' தான்'' என்றார்.