வேலூர்: ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கும், 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர், கடந்த 2022 மார்ச் 16ஆம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் தனது 4 நண்பருடன் படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அந்த ஆட்டோவில் பயணித்த 5 பேர், ஆட்டோவை வேறு பாதையில் செலுத்தி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து கைப்பேசி, நகை மற்றும் ரூ. 40,000 பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
5 பேர் கைது:
இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் (20), கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி (21), பரத் (எ) பாரா (18), சந்தோஷ் (எ)மண்டை (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதன்படி, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, குற்றத்தில் தொடர்புடைய சிறுவன் சென்னையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு டெல்லி நிர்பயா வழக்கின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது மனநிலை 18 வயதுக்கு மேற்பட்டோரின் மனநிலைக்கு ஈடானது என முடிவு பெறப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், அந்த சிறுவன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் இன்று (பிப்ரவரி 18) தீர்ப்பு வழங்கியுள்ளார்.