மதுரை: கள்ளர் சீரமைப்பு உள்ளிட்ட ஆதிதிராவிடர், வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறையால் நடத்தப்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கப்படும் என்ற அறிவிப்பை பல்வேறு அமைப்புகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கமாட்டோம் என அண்மையில் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு மட்டும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மற்ற பள்ளிகளுக்கும் அதுபோன்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட வலியுறுத்தி, 'அறிவுச்சமூகம்' அமைப்பின் தலைவரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் பள்ளிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்முதல்வன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விளக்கத்தை அறிவுச்சமூகம் வரவேற்கிறது. அதேவேளையில், விளக்கமளித்தால் மட்டும் போதாது. சட்டமன்றத்திலும் அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, கள்ளர் சீரமைப்பு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைப்பதாக அறிவித்தார். ஆனால், தற்போது கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை மட்டும் இணைக்கமாட்டோம் என்று விளக்கமளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.