ETV Bharat / entertainment

கமல், சூர்யா, அஜித் என வரிசையாக பெரிய படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் - NETFLIX PANDIGAI 2025

Netflix Pandigai 2025: பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2025ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

2025இல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல்
2025இல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல் (Credits : Netflix India South X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 16, 2025, 12:20 PM IST

சென்னை: திரையரங்குகளில் வெளியான பிறகு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கழித்து திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது வழக்கம். திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் ஓடிடி வெளியீடுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் 2025ஆம் ஆண்டில் வெளியாகும் பல முக்கிய படங்களின் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த 9 படங்களின் பட்டியலை நேற்று காலையில் இருந்தே Netflix Pandigai என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி, அஜித்தின் 'குட் பேட் அக்லி' முதல் கமல்ஹாசனின் 'தக் லைப்' உள்ளிட்ட ஒன்பது தமிழ்ப் படங்களின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. அதன் விபரம் பின்வருமாறு:

இதையும் படிங்க: கத்தியால் ஆழமாக குத்தப்பட்ட பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்!

குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ’குட் பேட் அக்லி’. பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு , த்ரிஷா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி. வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் ஏப்ரம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அஜித்தின் டான் தோற்றத்தில் உள்ள போஸ்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறது. சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று 'ரெட்ரோ' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திட்டமிடப்பட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவில்லை. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமை பற்றிய அறிவிப்பை கடந்த பொங்கலன்றும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியிருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

காந்தா

'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற வீரப்பன் தொடர்பான ஆவணத் தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ் தற்போது துல்கர் சல்மானை வைத்து ‘காந்தா’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தக் லைஃப்

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்.’ இப்படத்தில் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விண்வெளி நாயக என வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலானது. திரையரங்குகளில் ஜூன் 5ஆம் தேதி வெளியாகக்கூடிய இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் 'டிராகன்' . ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் கவுதம் மேனன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காதலர் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

பெருசு

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'பெருசு'. இளங்கோ ராம் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, தீபா, நிஹரிகா, சாந்தினி, மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு பெரியவரின் இறுதி சடங்கில் நடக்கும் பிரச்சனையை சுற்றி நடக்கும் கதையாக உவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியது.

பைசன்

'வாழை' படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'பைசன்' . முன்னணி கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரவேஸ்வரன் ஆகியோரும் பசுபதி, லால், கலையரசன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்காத நிலையில் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றது.

இவை மட்டுமல்லாமல் சுதா கொங்காராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடிக்கவுள்ள படத்தின் ஓடிடி உரிமத்தையும் கைபற்றியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.