சென்னை: நடிகர் தனுஷ் வொண்டர் பார் நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் கடந்த 2015இல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் 2022இல் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நயன்தாரா வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம் 'nayanthara beyond the fairy tale' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த ஆவணப்படத்தில் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து நடிகை நயன்தாரா தனது ஆவணப் படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த "நானும் ரவுடி தான்" படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தது.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் வொண்டர் பார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இறுதி விசாரணைக்காக கடந்த ஜன 22ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன.28) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், நயன்தாரா ஆவணப்படத்தில் "நானும் ரவுடி தான்" திரைப்படத்தில் இடம்பெறாத காட்சிகளுக்கும் வொண்டர் பார் நிறுவனம் உரிமை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'மின்னல் முரளி' இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா?... 'சூர்யா 47' மாஸ் அப்டேட்! - SURIYA WITH BASIL JOSEPH
இதனையடுத்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொடர்ந்த மனு மீதான வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், ஆவணப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், பதிப்புரிமையை எதிர்த்து வழக்கு தொடர உரிமை இல்லை என உத்தரவிட்டு, நெட்ஃபிளிக்ஸ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.