மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்காக கடந்த நவம்பர் 7ஆம் தேதி, வேதாந்தாவின் துணை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்'-க்கு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கான ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது.
இதற்காக, இப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த 5 ஆயிரம் ஏக்கருக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மலை மீது ஏறி போராட்டம்:
இதற்கிடையே, டிசம்பர் 9ஆம் தேதி தமிழக அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி, டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. தமிழக அரசின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றாலும், மத்திய அரசு இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச.16) மாலை அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் ஏறி, அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள், "மத்திய அரசு இந்த ஏல அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர். தொடர்ந்து நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மலை மீது அமர்ந்து போராட்டம் நடத்துவோம் எனவும் அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை அரிட்டாபட்டி ஊர் மந்தையில் கூடிய மக்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
"அரிட்டாபட்டி மண்ணையும், மக்களையும் காப்போம்"
அந்த போராட்டத்தில் மறைந்த சுற்றுச்சூழல் போராளி அரிட்டாபட்டி ரவிச்சந்திரனின் சகோதரி விமலா கூறுகையில், "இந்த மண்ணின் வளங்களைக் காப்பதற்காக அரிட்டாபட்டி மக்களும், அருகில் உள்ள கிரமங்களான வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம், மீனாட்சிபுரம், தெற்குத்தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து போராடி வருகிறோம்.
நாங்கள் எதிர்பார்க்கும் முடிவு இன்னும் மத்திய அரசிடம் இருந்து கிடைவில்லை. எனவே, எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும். இங்குள்ள வளங்களையும், பல்லுயிர்ச்சூழலையும் மட்டுமன்றி இந்த மக்களையும் அழிப்பதற்கு உங்களின் மனசாட்சி எவ்வாறு இடமளிக்கிறது? எங்கள் உயிர் போகும்வரை நாங்கள் போராடுவோம்," என்றார்.