தமிழ்நாடு

tamil nadu

பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்! - Annapoorna Explain on video viral

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 7:05 PM IST

பன் + க்ரீம் வீடியோ மற்றும் அன்னபூர்ணா ஹோட்டல் ஓனர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலான நிலையில், இதற்கு ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அன்னபூர்ணா அறிக்கை, நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்
அன்னபூர்ணா அறிக்கை, நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன் (Credits - Annapoorna X Page, ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கடந்த செப்.11ஆம் தேதி நடைபெற்ற தொழில் துறையினர் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ''பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் பன்னுக்குள் வைக்கும் க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? அதனை முறைப்படுத்த வேண்டும்: எனக் கேட்டார்.

அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுமட்டுமின்றி, அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இதுகுறித்து அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "கடந்த செப்.11ஆம் தேதியன்று, நிதி அமைச்சர் மற்றும் கார்ப்ரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கோயம்புத்தூரில் உள்ள MSMEகள் மற்றும் வர்த்தக சபையின் பிரதிநிதிகளின் உரையாடலின் போது, ​​எங்கள் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் கௌரவ தலைவர் டி.ஸ்ரீனிவாசன் பேக்கரிகளில் வெவ்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு ஜிஎஸ்டி விகிதங்கள் பற்றிய பிரச்னையை எழுப்பினார்.

இதையும் படிங்க :பன் + க்ரீம் என புதிய விளம்பரத்தை வெளியிட்ட அன்னபூர்ணா ஹோட்டல்! - annapoorna cream bun add

மறுநாள், நிதியமைச்சருடனான உரையாடல் வீடியோ வைரலாக பரவியதால், தவறான புரிதல் அல்லது உண்மைகளை தவறாக சித்தரிப்பது இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் நிதி அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்த தனிப்பட்ட உரையாடலின் வீடியோ சமூக ஊடகங்களில் கவனக்குறைவாக பகிரப்பட்டது. இது நிறைய தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை தவறாக பகிர்ந்ததற்காக, தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளனர். அதன் விளைவாக வீடியோவை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைப்புகள் மற்றும் அமைப்புகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக ஜிஎஸ்டி கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக எங்கள் நிதி அமைச்சருக்கும், எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் மூலம் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த எபிசோடை முடித்துவிட்டு தொடர விரும்புகிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். ஆதரவு மற்றும் உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருந்த எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையை முதலில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அன்னபூர்ணா நிறுவனம், பின்னர் நீக்கி மீண்டும் திருத்தி அமைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. அதேநேரம், மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கோவை சிங்காநல்லூர் மண்டல பாஜக தலைவர் சதீஷ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details