சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவி கடந்த 23ஆம் தேதி பல்கலை வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சம்பவத்தின்போது மாணவி எதிர்கொண்ட துயரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவத்தின்போது அக்கியூஸ்டட் ஞானசேகரனுக்கு வந்த போன் கால் யாரிடம் இருந்து வந்தது? இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர்? ஞானசேகரனுக்கு பிறகு கைது பட்டாளம் நீளுமா போன்ற கேள்விகள் வலுவாக எழுகின்றன.
முதல் தகவல் அறிக்கை
''கடந்த 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 7.45 மணிக்கு S&H என்னும் கட்டிடத்திற்கு பின்புறம் நானும் எனது ஆண் நண்பரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு மறைந்திருந்த நபர் எங்கள் அருகில் வந்து, நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் வீடியோ எடுத்துவிட்டேன். இந்த வீடியோவை விடுதி ஊழியர்களிடமும், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் காண்பித்து உங்களுக்கு டிசி தர வைப்பேன்.. கல்லூரியில் இருந்து உங்களை நீக்கி விடுவேன் என மிரட்டினான். இதற்கு நானும் என் ஆண் நண்பரும் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டோம். பின்னர் அவன் நான் சொல்வதை கேட்டால் உங்களை காப்பாற்றுவேன் என்றான். மேலும் என் ஆண் நண்பரை அந்த நபர் தனியாக அழைத்து மிரட்டி அங்கிருந்து விரட்டினார். பின்னர் என்னிடம் வந்து உன் ஆண் நண்பரை பல்கலைக்கழக ஊழியர்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னுடன் வா உன்னை காப்பாற்றுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றான். அப்போது EEE டிபார்ட்மெண்ட் வழியாக பின்பக்கம் கூட்டிச்சென்று அங்கு உள்ள நெடுஞ்சாலை ஆய்வக கட்டட சந்திப்பில் இருட்டான இடத்தில் நிறுத்தி என்னை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கினான்.