நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுமம், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் தஞ்சாவூர் அருகில் நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் பொங்கல் விழா ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 75-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மங்கல இசையுடன் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டு இயற்கை சூழலில் தென்னந்தோப்பில் முழு வாழை இலையில் 25 வகையான அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. வெளிநாட்டு பயணிகள் நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி சேலை அணிந்து அனைவருடனும் அமர்ந்து உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டனர். நடன குதிரை நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தது.
தோப்பில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை ஆடுகள், சண்டை சேவல்கள், நாட்டு இன நாய்க்கள், பந்தய குதிரை வண்டி, பந்தய மாட்டு வண்டி உள்ளிட்டவை காட்சிபடுத்தபட்டிருந்தது. அனைவரும் அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்தனர். தொடர்ந்து கிராம எல்லையில் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாலை அணிவித்து வரவேற்றார். சுற்றுலா பயணிகள் அனைவரும் மாட்டு வண்டியில் நாஞ்சிக்கோட்டை கிராம வீதிகளில் மேள தாளத்துடன் வலம் வந்தனர்.
அங்கு வீதிகளில் மகளிர் அவர்களது வீட்டின் முன் வண்ண வண்ண கோலங்கள் போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வீட்டின் வாசலில் உரல், அம்மி, ஆட்டுக்கல் போன்ற பழமையான வீட்டு உபயோக பொருட்களை காட்சிபடுத்தி அதில் நெல் இடித்தும் காட்டினர். அதனை தொடர்ந்து நாஞ்சிக்கோட்டை அய்யனார் கோயிலுக்கு அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வந்தடைந்தனர். அவர்கள் கொம்பு இசையுடன் வரவேற்கப்பட்டனர். அங்கு கோவியில் மண் பானைகளில் பெண்கள் பொங்கல் வைப்பதை கண்டு மகிழ்ந்து அவர்களுடன் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என அனைவரும் கோஷமிட்டு கும்மி கோலாட்டத்துடன் கொண்டாடினர், பின்னர் தமிழக பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், இளவட்ட கல் தூக்குதல், கயிறு இழுத்தல் ஆகியவற்றில் வெளிநாட்டினர் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கிராமிய கைவினை தொழில்களான மண்பானை செய்தல், மூங்கில் கூடை முடைதல், கீற்று பின்னுதல், கயிறு திரித்தல், உள்ளிட்டவையும் மருதாணி இடுதல், வளையல் அணிவித்தல், கிளி, கை ஜோதிடம் பார்த்தல் ஆகியவற்றையும் கண்டு வியந்தனர்,
மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், காளையாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பச்சைகாளி பவழக்காளி ஆட்டம், தேவியர் ஆட்டம், கருப்புசாமி ஆட்டம், தீப்பந்தம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் உடல்வித்தை விளையாட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதில் வெளிநாட்டினரும் பங்கேற்று நடனமாடி உற்சாகமடைந்தனர். அங்கு அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், வாழைப்பழம், கரும்பு மற்றும் இளநீர் வழங்கப்பட்டது.
அதனையும் ருசித்து கொண்டே நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது என்றும் மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கிராம மக்கள் அன்பானவர்கள் அவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சத்தியராஜ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.