தூத்துக்குடி: தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலம் போட்டு அதன்மேல் அடுப்பு வைத்து புதுப்பானையில் பனை ஓலை வைத்து புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தனர்.
தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முன்பாக பொங்கல் பானையை வைத்து ஒருசேர பொங்கலிட்டனர். பானையில் பால் பொங்கி வரும்போது பொதுமக்கள் "பொங்கலோ பொங்கல்" என தெரிவித்து சூரியனை வழிபட்டு தைப்பொங்கலை வரவேற்றனர்.
மேலும் தூத்துக்குடி பொன்னகரம் சந்தி விநாயகர் கோவில் தெரு, திரவிய புரம், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளின் வெளியே வைத்து பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு எந்த விதமான இயற்கை சீற்றங்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் விவசாயம் செழிக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய நலமாக வாழ வேண்டுமென பிரார்த்தனையும் செய்தனர்.
மேலும், குருஷ்புரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு ஆலயத்திற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தில் வண்ண கோலமிட்டு பாரம்பரியமாக புது பானையில் ஓலை வைத்து பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர். இதை தொடர்ந்து பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.