மதுரை: அவனியாபுரத்தில் தை பொங்கலை முன்னிட்டு இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண அமைச்சர் மூர்த்தி வந்திருந்தார். அப்போது, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண துணை முதலமைச்சர் வருவார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளின் தை முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பில் முதல் சுற்றில் இறங்கக்கூடிய மாடுபிடி வீரர்கள் 75 பேர் பங்கேற்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முடிவில் 73 மாடுகள் களம் கண்டன. 11 மாடுகள் பிடிபட்டன. தலா இரு மாடுகள் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (மஞ்சள் நிற உடை எண் 38), கரடிக்கல்லைச் சேர்ந்த சுஜித்குமார் (மஞ்சள் நிற உடை எண் 16) ஆகிய இருவர் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதாக போட்டிக் குழு அறிவித்துள்ளது.
இரண்டாவது சுற்றில், 82 மாடுகள் களம் கண்டன. 22 மாடுகள் பிடிபட்டன. ஆறு பேர் இந்த சுற்றில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் மூன்று காளைகளைப் பிடித்த சமயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (இளஞ்சிவப்பு / பிங்க் நிற உடை எண் 75), இரண்டு காளைகளைப் பிடித்த விக்னேஷ் (இளஞ்சிவப்பு நிற உடை எண் 88), இரண்டு காளைகளைப் பிடித்த இன்பசேகரன் (இளஞ்சிவப்பு நிற உடை எண் 86), இரண்டு காளைகளை அடக்கிய வாடிப்பட்டியைச் சேர்ந்த பிரஷாந்த் (இளஞ்சிவப்பு நிற உடை எண் 69), புதுக்கோட்டை வல்லரசு (இளஞ்சிவப்பு நிற உடை எண் 76), தேனூர் அஜய் (இளஞ்சிவப்பு நிற உடை எண் 82) ஆகியோர் ஆவர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இன்று காலை 9 மணிக்கு முடிவுற்ற மருத்துவப் பரிசோதனையில், 242 காளைகள் அனுமதிக்கப்பட்டும், 13 காளைகள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இரண்டாவது சுற்று விளையாடிய மாடுபிடி வீரர் டேவிட் (இளஞ்சிவப்பு நிற உடை எண் 67) இடுப்பில் காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க |
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, கடந்தாண்டை விட இந்தாண்டு மாவட்ட நிர்வாகம், மாநகர் காவல்துறை, கால்நடைத் துறை, மருத்துவத் துறை என அனைவரும் சேர்ந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அவனியாபுரம் சிறப்பாக இருந்தது. இதைவிட நாளை நடைபெறும் பாலமேடு ஜல்லிகட்டு இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்த மூர்த்தி, நாளை மறுநாள் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்காடு வெகுச்சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மக்களின் பேராதரவும் கிடைத்துள்ளது, அவர்கள் தாமாக முன்வந்து நன்கொடைகளும் அளித்துள்ளனர் என்று கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் ஜல்லிக்கட்டு குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், அவர் நாளை மறுநாள் (ஜனவரி 16) நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வருவார் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.