தஞ்சாவூர்:தஞ்சாவூரில் திமுக சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக்கணிப்பு கூட்டம், இன்று (மார்ச் 2) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ் விஜயன், எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் தஞ்சை தொகுதி எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், “எங்களுடைய நோக்கம் தேர்தல் அறிக்கை என்பது, மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் மக்களிடமே கேட்டு, என்ன தேவை என்பதை அறிந்து, அதனை தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடியிருக்கிறோம்.
மனுக்கள் பெறும் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைந்து, நாளை முதல் குழுவினர் கூடி மனுக்களை பரிசீலித்து, எந்த அளவிற்கு தேர்தல் அறிக்கையில் இணைக்கலாம் என்பதை முடிவு செய்து தேர்தல் அறிக்கையில் இணைப்போம். பெரும்பாலான மனுக்கள் ஒன்றிய அரசிடம் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ஜிஎஸ்டியில் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்கள்.