புதுக்கோட்டை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா நேற்று(மா.01) கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் முதலமைச்சரின் பிறந்தநாளில் பிறந்த 13 குழந்தைகளுக்குத் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, திமுக நகரச் செயலாளர் செந்தில், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "எதிரிகளைப் பலவீனமாக எடை போட மாட்டோம். அதே நேரத்தில் எங்களுடைய சக்தி என்ன என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை எந்த ஒரு சக்தியாலும் அழித்து விட முடியாது. ஒழித்து விட முடியாது. தமிழக மக்களின் மனங்களிலேயே இடம் பெற்றுள்ள கட்சி திமுக.
பாஜக பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைத் தெரிந்தே கட்சியில் சேர்க்கிறது. ஆனால் 2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் பூதக்கண்ணாடி வைத்துக் கண்காணிக்க முடியாது. அதே வேளையில், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எங்களுக்குத் தெரிந்தால் அவர்களைச் சேர்க்க மாட்டோம் அனுமதிக்க மாட்டோம்.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். பாஜக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். நடப்பதைத் தான் பார்க்க வேண்டும். பாஜக முதலில் 3 சதவீதத்தைத் தாண்டட்டும். அப்புறம் 30 சதவீதத்திற்குப் போகலாம். ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் தமிழகத்தில் உதயசூரியனை யாரும் மறைக்க முடியாது.
அதிமுக எம்பிக்கள் காணாமல் போனதைத் தற்போது தேடிக் கொண்டுள்ளனர். எங்கள் எம்பிக்கள் மக்களோடு தான் இருக்கின்றனர். எங்கள் எம்பிக்களை எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம். அதனால் அவர்கள் எம்பிக்கள் காணாமல் போனதைத் தற்போது சீட்டுக் கொடுப்பதற்காகத் தேடிக் கொண்டுள்ளனர்.
சாந்தன் இறந்த நிலையில் சிறப்பு முகாமில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்களும் வலியுறுத்துகிறோம். மிகப் பெரிய வெற்றியை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின்.
அவரோடு உழைப்பால் தான் சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனை அண்ணாமலை போன்றவர்கள் மூடி மறைக்க நினைத்தாலும், உதாசினப்படுத்தினாலும் தமிழக மக்களின் இதயங்களில் உதயநிதி ஸ்டாலினுக்குத் தனி இடம் உண்டு என்றார்.
இதையும் படிங்க: சுற்றுலா வந்த மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்; ராட்சத அலையில் சிக்கி ஒருவர் பலி.. 4 பேர் மாயம்!