கோயம்புத்தூர்: விவசாய நிலங்களிலிருந்து காட்டுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒன்றைக் கொம்பு காட்டு யானைக் கண்ட முதியவர் ஒருவர் பதறியடித்துக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தொண்டாமுத்தூர், சாடிவயல், மருதமலை, தடாகம் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இது யானைகளின் இடம் பெயர் காலம் என்பதால் கேரள வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் வரும் யானைக் கூட்டம் சிறுமுகை பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதி வழியாக முதுமலை, பந்திப்பூர் வனப்பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வலசை செல்லும் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மாலை மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுவது தொடர்ந்து வருகிறது. அப்படி ஊர்களுக்குள் வரும் யானைகளால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுவதால் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை புகுந்துள்ளது. இரவு முழுவதும் விவசாய நிலத்திலிருந்த யானை நேற்று காலை 6.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறி வனப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, சாலையில் ஒற்றை கொம்பு யானை நடந்து வருவதைப் பார்த்த முதியவர் ஒருவர் பயத்தில் ஓடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே தடாகம் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு வரும் ஒற்றை ஆண் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமிலிருந்து முத்து என்ற கும்கி யானை நேற்று முன்தினம் வந்த நிலையில், நேற்று சுயம்பு என்ற இன்னொரு கும்கி யானை வந்துள்ளது.
இதையும் படிங்க: கிராம மக்களை காக்க களமிறங்கிய கும்கி யானை முத்து.. நிம்மதியில் பெருமூச்சு விட்ட மக்கள்!
இந்த இரண்டு கும்கி யானைகளும் இணைந்து ஊருக்குள் புகும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், மாலை மற்றும் காலை நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி கும்கி யானைகளை ரோந்து அழைத்துச் செல்லும்போது காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியே வராமல் தடுக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகக் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ஏராளமான பயிர் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வனத்துறையினர் கும்கி யானைகளை களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.