தூத்துக்குடி: கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கியது. கோவில்பட்டியில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்மூன்றாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியை முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், சென்னை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளரும் கோவில்பட்டியை சேர்ந்தவருமான ஆர்.ராதாகிருஷ்ணன்,கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் லீக் போட்டியில் என்.சி.ஓ.இ(நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்)போபால் அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதின.இப்போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை வருமான வரித்துறை அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் வினோத் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியில் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மாரீஸ்வரன், கார்த்திக் இருவரும் விளையாடி வருகின்றனர். இருவரும் கோவில்பட்டி விளையாட்டு சிறப்பு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இறுதி பேட்டிக்கான யுத்தத்தில் வெல்ல போவது யார்? ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் இன்று சென்னையில் மோதல்! - SRH Vs RR Qualifier 2